பயணக் கட்டுப்பாட்டை மீறி மக்கள் நடமாட்டம் வர்த்தக நிலையங்களும் திறப்பு – வவுனியாவில் சம்பவம்

0
வவுனியாவில் பயணக்கட்டுபாட்டை மீறி மக்கள் வீதிகளில் அதிகளவு நடமாடுவதை அவதானிக்க முடிவதுடன், வர்த்தக நிலையங்கள் சிலவும் திறக்கப்பட்டுள்ளதையும், அங்கு மக்கள் சென்று வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்றை அடுத்து நாடு முழுவதும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொட்களை வழங்குவதற்கு வீடுகளுக்குச் சென்று விநியோகிப்பதற்கு நாடுபூராகவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இப் பயணக்கட்டுப்பாட்டை மீறி வவுனியாவில் பல மொத்த விற்பனை நிலையங்களும், சில்லறை வியாபார நிலையங்களும் திறக்கப்பட்டு விற்பனை இடம்பெறுவதுடன் மக்களும் அங்கு சென்று வருவதனால் வீதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
வவுனியா பிரதேச செயலகத்தால் அதிகமானவர்களுக்கு பயணக்கட்டுப்பாட்டு நேரத்தில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளமையே இவ்வாறு வர்த்தக நிலையங்கள் திறப்பு, அதிகளவு மக்கள் நடமாடுவதற்குமான கரணம் என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் வவுனியா வர்த்தக சங்க செயலாளர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, அனுமதியளிக்கப்பட்ட மொத்த வியாபார நிறுவனங்கள், பொது மக்களுக்கு வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகம் செய்வதற்கும் மாத்திரமே அனுமதி வழங்கியுள்ளதாகவும் எக்காரணம் கொண்டும் எவரும் வர்த்தக நிலையங்களை திறந்து வியாபாரம் செய்வதற்கு அனுமதி அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.