முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைப்பு : பின்னணியில் யார்?

0

இலங்கையில் 3 தசாப்தம் நடந்த உள்நாட்டுப் போர் நிறைவடைந்துஇ எதிர்வரும் மே மாதம் 18ம் தேதியுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி யுத்தம் முடிந்த நிலையில்இ இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை கடந்த 12 வருட காலமாக இலங்கைத் தமிழர்கள் நினைவுக்கூர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் வருடா வருடம் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படும். மே மாதம் 12ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு நினைவேந்தல் வாரம் கடைபிடிப்பதை தமிழ்த் தரப்பு வழக்கமாக கொண்டுள்ளது. இந்த ஆண்டு நேற்று புதன்கிழமை நினைவேந்தல் வாரம் ஆரம்பமானது. இதையடுத்து முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் பொது நினைவேந்தல் தூபியொன்றை அமைப்பதற்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். இதன்படி குறித்த பகுதிக்கு நேற்று மாலை வேளையில் பொது நினைவு தூபி கொண்டு செல்லப்பட்ட பின்னணியில் அங்கு வருகை தந்த பாதுகாப்பு பிரிவினர் அதற்கு இடையூறுகளை விளைவித்ததாக தமிழ் தரப்பினர் தெரிவிக்கின்றனர். போலீசார் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்கு வருகைத் தந்து அந்த இடத்தில் நினைவு தூபியை நிர்மாணிக்க இடமளிக்காது இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. நினைவு தூபியை கொண்டு சென்றவர்களிடம் பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளையும் நடத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.

முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வருகை தந்தவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற பாதுகாப்பு தரப்பினர் உடன் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதையடுத்து குறித்த பகுதியில் இரவு வேளையில் இராணுவத்தினர் முழு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த நினைவு தூபி இன்று (13) அதிகாலை வேளையில் அடையாளம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்றுஇ பொது நினைவு தூபியை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட நினைவு தூபி குறித்த இடத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான பின்னணியில் நினைவேந்தல் தூபி உடைக்கப்பட்டுள்ளமை மற்றும் புதிய நினைவேந்தல் தூபி காணாமல் போயுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.