ஜனாதிபதி பிரதமர் பதவியே எமது இலக்கு – ரணில் தரப்பு அதிரடி அறிவிப்பு

0
ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொள்வதற்கான அடித்தளமாகவே ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்கின்றார் என்று அக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் சென்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலருடன் கலந்துரையாடி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், நாட்டின் பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. இந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதே எமது நோக்கமாகும். அதற்கு தேவையான வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி பதவியை பெற்றுக்கொண்டு, நாடு வீழ்ந்துள்ள இந்த பாரிய நிலைமையில் இருந்து மீட்கமுடியாது. அதனால் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.
அத்துடன் வீழ்ந்திருக்கும் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதென்றால், நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை பெற்றுக்கொள்ளவேண்டும். அதற்கான அடித்தளமே ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற வருகை.
இதற்கு நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என சிலர் கேட்களாம். எந்தவொரு விடயத்தையும் சாதிப்பதற்கு அதுதொடர்பான அனுபவமும் திறமையும் இருக்கவேண்டும். அத்தகைய அரசியல் அனுபவமும் திறமையும் ரணில் விக்ரசிங்கவிடம் இருக்கின்றது. ஒரு ஆசனம் இருந்தாலும் அதனை சாதிக்க முடியும்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் பல விடயங்களை நிறைவேற்றிக்கொண்ட அனுபவம் ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கின்றது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை பெற்றுக்கொண்டு நாட்டை மீண்டும் கட்டியயெழுப்புவதே எமது இலக்காகும் என்றார்

Leave A Reply

Your email address will not be published.