கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த இதுவரை 262 பில்லியன் ரூபாய் செலவு!

0
கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசாங்கம் 262 பில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற நிதி அமைச்சின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நிதி அமைச்சர் என்ற வகையில் அமைச்சிற்குரிய அனைத்து நிறுவனங்களதும் தற்போதைய நிலை மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தினார்.
நிதி அமைச்சின் செயலாளர் திரு.S.R.ஆட்டிகல அவர்களினால் இதன்போது ´சவாலுக்கு மத்தியில் சுபீட்சத்தை நோக்கி´ என்ற நிதி அமைச்சின் முன்னேற்ற மற்றும் எதிர்கால நோக்கு முன்வைக்கப்பட்டது.
கொவிட் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளை அரசாங்கம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதாக தெரிவித்த S.R.ஆட்டிகல, சமூக பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தி ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமான மூன்றாவது அலைக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டினார்.
இந்த கடினமான சூழ்நிலையிலும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் உள்ளிட்ட நிவாரணம் பெற தகுதியான மக்களுக்காக பிரதமரின் ஆலோசனைக்கமைய நிதி அமைச்சின் ஊடாக ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த S.R.ஆட்டிகல, 2019ஆம் ஆண்டு தீர்க்கப்படாதிருந்த 423 பில்லியன் நிலுவை தொகையை செலுத்திய பின்னரே கடந்த வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
வட்டி விகிதத்தை குறைத்து கடன் நிவாரணங்களை வழங்கியும் பணவீக்கத்தை 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக பேணுவதற்கு முடிந்ததாகவும், கடந்த மே மாதம் அது 6.1 சதவீதம் அல்லது 6.2 வரை அதிகரித்த போதிலும் அதனை குறைப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக S.R.ஆட்டிகல சுட்டிக்காட்டினார்.
பரவலாக்கப்பட்ட நிதியிலிருந்து இதுவரை அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ள அபிவிருத்தி திட்டங்கள் 11,000 ஆகும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் கொடுப்பனவு வழங்கப்படும் சகல மக்களுக்கும் 5,000 ரூபாய் கொடுப்பனவு நான்கு முறை வழங்கப்பட்டுள்ளதாக இதன்போது கருத்து தெரிவித்த சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார்.
500 உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நீல் பண்டார ஹபுஹின்ன சுட்டிக்காட்டினார். கொவிட் நிலைமைக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்த வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வங்கிகளுடன் கலந்துரையாடி வட்டி விகிதத்தை குறைத்து கடன் நிவாரணங்களை வழங்குவதற்கு முடிந்ததாக நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் R.M.P.ரத்நாயக்க குறிப்பிட்டார்.
வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்குள் ஈர்ப்பதற்கு நிதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருவதாக தெரிவித்த R.M.P.ரத்நாயக்க 2022 ஜனவரி மாதமளவில் தேசிய கடன் பாதுகாப்பு நிறுவனமொன்றை நாட்டில் நிறுவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2020-2024 காலப்பகுதியில் பங்குச்சந்தையில் புதிதாக 500 நிறுவனங்களை பட்டியிலிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி வெவ்வேறு கருத்துக்களை முன்வைப்பினும் இதுவரை வெளிநாட்டு கடன்களை முறையாக செலுத்த முடிந்துள்ளதாகவும், அதேபோன்று எதிர்காலத்திலும் அக்கடன் தவணைகளை எவ்வித தாமதங்களும் இன்றி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மன் தெரிவித்தார்.
நிதி அமைச்சின் பல்வேறு இடங்களில் பரந்து காணப்படும் நிறுவனங்களை மக்களின் வசதிக்காக ஒரே கட்டிடத்தொகுதிக்கு கொண்டு வருவது தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் இதன்போது நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.