வவுனியாவில் முன்னுதாரணமாய் செயற்படும் கந்த கணேசதாசக் குருக்கள் VBC/CSR1

வவுனியாவில் பல நல்லுள்ளம் கொண்டவர்கள் பலர் சமூக நலனுடைய சேவைகளை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் எமது VBC ஊடக வலையமைப்பு வாரந்தோறும் ஒவ்வொரு சமூக சேவையாளர்களை சமூக ஊடகங்களில் ஆராய்ந்து அவர்களை கௌரவிக்கும் முகமாக பதிவுகளை மேற்கொள்கின்றது. அந்தவகையில் இன்று பலராலும் ஒரு குருவாக, நல்லுள்ளம் படைத்த மனிதராக, நண்பராக பல பரிமாணங்களில் செயல்படும் கந்த கணேசதாசக்குருக்கள் அவர்களை காண்போம்.

வவுனியாவின் புகழ்பெற்ற குடியிருப்பு பிள்ளையார் கோவிலின் பிரதான சிவாச்சியாரும், மூத்த சிவாச்சியாருமான கணபதி சித்தர் கனகசபாபதிக்குருக்கள் கந்தசாமிக்குருக்கள் அவர்களை அறியாதவர்கள் என்று யாரும் இல்லை. அவரிடம் வித்தியாரம்பம் செய்த பிள்ளைகள் ஏராளம். சமயம், சமூகம், யோகாசனம், ஜோதிடம் என பல துறைகளில் ஆளுமை மிக்க இவரது பணிகளை வவுனியா மண் என்றும் மறந்துவிட முடியாது.

அவரது சிரேஸ்ட புதல்வன் கந்த கணேசதாசக் குருக்கள் தந்தையை போலவே பல்துறை ஆற்றல் மிக்கவராக இருந்தாலும், இளம் வயதில் சமூகப் பணிக்கென தன்னை அர்ப்பணிக்கும் நல்லுள்ளம் கொண்டவராக மிளிர்கின்றார். பொதுவாக அந்தண சிவாச்சாரியார்கள் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவதையே முழு நேரமாகக் கொள்வது வழக்கமாயிருக்கும் இக்காலத்தில் 1984ம் ஆண்டு பிறந்து 37 வயதிலேயே சமூக நலனை தம் பேறாக நினைக்கும் சிவாச்சாரியார்கள் உருவாகுவது காலத்தின் தேவைதான்.

கொரோணாவின் தாக்கம் வவுனியாவில் உச்சநிலையை அடைந்து வீட்டிலிருந்து வெளியே வருவதற்கே பயப்பட்ட காலத்தில் சில சமூக சேவையாளர்களுடனும், கிராம சேவையாளர்களுடனும் இன்னும் பலருடனும் இணைந்து, துணிந்து சமூகப்பணிகளில் இறங்கியவர்.

அவ்வப்போது முகப்புத்தகத்தில் தனது பதிவுகளில் சமயப் பொறை, எல்லாச் சமயமும் ஒன்று தான் என்ற கோட்பாட்டின் மூலம் அனைத்து சமயத்தை சார்ந்தவர்களையும் தன்பால் ஈர்க்கவைத்தவர். தனது வேலைப்பளுக்களுள், அறநெறிப் பாடசாலைகளுக்கு சென்று உபதேசங்களை வழங்கி எதிர்கால சந்ததியை ஆரோக்கியமான சந்ததியாக உருவாக்க பாடுபடுபவர்.

வயது வேறுபாடின்றி, வேறெந்த பாகுபாடுகளுமின்றி அனைவருடனும் சமத்துவமாக பழகக்கூடியவர். அடிக்கடி தனது பதிவுகளில் தந்தையை மேற்கோள்காட்டி ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற திருவாசகத்தை மக்களிடையே புகுத்தியவர். இவ்வாறு இவருடைய நடப்புக்கால சேவையை கூறிக்கொண்டே போகலாம். தனது பெயரின் முதல் மூன்றெழுத்துக்களை தந்தையின் பெயரால் குறிப்பிட்டு பாசம், பிணைப்பு, சந்ததிவழி என்பவற்றை சமூகத்துக்கு மெய்ப்பித்துள்ளார்.

பள்ளிப்பருவத்திலேயே சமய ஈடுபாடும், ஆரோக்கியமான சிந்தனைகளையும் உடைய இவர் தற்போது பல்லின மக்களுக்கும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதில் முன்னின்று செயற்படுவதற்கும் எமது VBC ஊடக வலையமைப்பு பெருமைகொள்கின்றது. இவரைப் போல் இன்னும் பல சிவாச்சியாரியார்களும், அரச, தனியார் துறையினரும் சேவையாற்றி வருகின்றனர். அவர்களையும் வரும் வாரங்களில் காணலாம்.

இன்று வவுனியாவுக்கு ஒரு அடையாளமாக, சமயத்துக்கு ஒரு அடையாளமாக, சமூகத்துக்கு ஒரு வழிகாட்டியாக திகழும் கந்த கணேஸதாசக்குருக்கள் அவர்களது பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என்று பணிகின்றோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button