இலங்கையின் பாரிய நெருக்கடியும், பின்னணியும் (தொடராய்வு)

இலங்கை கடந்த சில மாதங்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதற்கு பலரும் கருத்துக்களை பதிவிட்டு வரும் சந்தர்ப்பத்தில் அரசை விமர்சித்தும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு இலங்கை அரசாங்கம், இந்நிலைக்கு நாடு தள்ளப்பட்டமைக்கு கடந்த காலத்தில் ஆட்சிசெய்தவர்களே காரணம் என கூறிவருகின்றது.

இக்கருத்தை கடந்த அனைத்துக் கட்சிகள் மாநாட்டில் மத்திய வங்கி ஆணையாளரும் சுட்டிக்காட்டியிருந்தார். இதன்போது முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கடும் எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளியிட்டார். மத்திய வங்கி ஆணையாளரின் கருத்துக்கு ஜனாதிபதி மன்னிப்பு கேட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் ரீதியில் மட்டுமல்லாது பொது மக்களும் தாமகவே வீதிகளில் இறங்கி போராடும் நிலை உருவாகியிருக்கின்றது. அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் பிரச்சினைகளை தீர்க்காமல் அசமந்த போக்குகளில் ஈடுபட்டு தமது நிலையை திடப்படுத்திக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மின் துண்டிப்பு

இலங்கையில் பல்வேறு முறையில் மின்வெட்டு அமுலாகி வருகின்றது. கடந்த மாதங்களில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில் படையினர், பொலிஸ் நிலையங்கள், அமைச்சர்கள் ஆகியோரது விடுகளில் எப்பொழுதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதாக அறிய முடியவில்லை. அவர்கள் சுகபோகமாகவே வாழ்கின்றார்கள். வாக்கு போட்ட மக்கள்தான் இருளுக்குள் இருக்கின்றார்கள் என்று தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பாக பல பதிவுகள் இடப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

மேலும் நேற்று முன்தினம் (01.04.2022) வவுனியாவில் இரவு நேரத்தில் ஏற்பட்டிருந்த மின்வெட்டு நள்ளிரவு 12:00 மணிக்கு மீளத்திரும்பும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் 12:25க்கே மின்சாரம் மீள பாவனைக்கு அளிக்கப்பட்டது. இது போல பல சம்பவங்கள் பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரச அதிகாரிகளும் மக்கள் நலனை கருத்திற்கொள்வதில்லை என்றே பார்க்க முடிகின்றது. அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு மட்டும் அரச அதிகாரிகள் உடனடியாக செயற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு வலுவடைந்து வருகின்றது.

மின்வெட்டு தொடர்பில் அரசின் போலித்தனம்

முன்னர் இருந்த எரிசக்தி அமைச்சர் காரணங்களின்றி மின்விநியோகத்தை தடைசெய்துள்ளார் என்று அரசு குற்றம் சாட்டி அவரது அமைச்சுப் பதவியை வெறிதாக்கியது. எரிபொருட்கள் கையிருப்பில் தேவையான அளவு இருப்பதாகவும், மின்சாரம் மற்றும் எரிபொருட்களை உரிய முறையில் மக்கள் பாவனைக்கு வழங்க அமைச்சு அக்கறை கொள்ளவில்லை என்று அரசு குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புதிய அமைச்சர் பதவிக்கு வந்ததும் இந் நிலை மாறும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் முன்னதை விட இப்போது அதிக நேரங்கள் மின்வெட்டும், எரி பொருள் பற்றாக்குறையும் நிலவுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆழும்கட்சியின் பொறுப்பற்ற பதில்கள்

மக்கள், ஊடகத்துறை என பலரும் ஆழும் தரப்பினரிடம் தற்போதைய நெருக்கடி தொடர்பாக கேள்விகளை எழுப்புகின்ற போது அரசு தரப்பு உரிய முறையில் பதிலளிக்காமல் இருப்பதும், தான்தோன்றித்தனமான பதில்களையும் அளித்து வருக்னிறது. இலங்கையின் ஜனாதிபதி என்ற முறையில் கோத்தபாய ராஜபக்ஷ்ச அனைவற்றுக்கும் தானே பொறுப்பேற்பதாக கூறியிருந்தாலும் தீர்வுகள் தொடர்பில் எவ்வித விளக்கங்களையும் அளிக்கவில்லை. இது இலங்கை இக்கட்டான சூழலில் இருப்பதை உறுதி செய்கின்றது. மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்ச தமது ஆட்சி கலையப்போவதுமில்லை, தாம் பதவி விலகப்போவதுமில்லை என திட்டவட்டமாகவும், தெளிவாகவும் தெரிவித்துள்ளார். இந்த தெளிவு மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளில் ஏற்படவில்லையா என்ற கேள்வி எழுகின்றது.

மேலும் ஒவ்வொரு அமைச்சரும் இப்போதுள்ள பிரச்சினைக்கு காரணங்களை மற்றைய அரசு மேல் திணித்து வருகின்றது. ஆனால் இப்பிரச்சினைகளை திர்க்க ஆலோசிக்கும் முனைப்பு எந்த வகையில் இருக்கின்றது என்பது தெரியவில்லை. மக்கள் ஆணையிட்டதால் தான் தாங்கள் ஆட்சிக்கு வந்ததாக ஜனாதிபதி தனது விசேட உரையில் தெரிவித்திருந்தார். இப்போது மக்கள் உங்களை வீட்டுக்கு போகச் சொல்கிறார்கள். நீங்கள் பதவி விலகுங்கள் என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டங்களும் அடக்குமுறைகளும்

மக்கள் தமக்கான அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்று அத்தியாவசிய தேவைகளுக்காக வீதிகளில் இறங்கும் நிலையை அரசு உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மக்கள் வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளனர்.

இது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என அரசியல் ஆய்வாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்களும், பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதில் பல பெண்கள் தமது பிள்ளைகளுடன் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டமைமைய பலரும் மேற்கோள் காட்டி கருத்து தெரிவிக்கின்றனர்.

இப் போராட்டம் திடீரென் வன்முறையாக மாற்றமடைந்தது. அந்த நிகழ்வை பதிவு செய்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை நாட்டில் மீண்டும் ஊடக சுதந்திரம் பறிபோயுள்ளமையையும், அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டமையையும் உலக நாடுகளுக்கு வெளிப்படையாக உணர்த்தியுள்ளது. மேலும் அப் போராட்டம் வன்முறையாக மாறுவதற்கு அரசு திரைமறைவில் செயற்பட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவசர காலச்சட்டமும் அடக்குமுறைத் திட்டமும

நாட்டில் பல்வேறு இடங்களிலும் பாரிய அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை எதிர்க்கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஏற்பாடு செய்து வருகின்றன. இன்று ஞாயிற்றுக்கிழமை (03.04.2022) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிய அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இலங்கை ஜனாதிபதி அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதையடுத்து போராட்டஙஙகள் பிற்போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஊரங்குச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் என்பவற்றால் பல இன்னல்களை எதிர்நோக்கியிருந்தனர். இப்போது அது தென்னிலங்கையிலும் அதன் பாதிப்பு தொடர்கின்றது.

இன்று நடைபெற இருந்த போராட்டங்கள் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். மக்கள் போராட்டத்தை கைவிடுவதற்கு அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம். மாறாக அவசரகாலச் சட்டம் மூலம் முடக்கியமை இன்னும் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகின்றது.

தொடர்ந்து அரசாங்கம் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தற்காலிகமாக தீர்வு காண்பதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றது. நிரந்தரமான தீர்வுக்கு அரசு செல்லும் வேகம் நாட்டு நிலைமையுடன் ஒப்பிடும் போது மந்தகதியாகவே தென்படுகின்றது.

அவசர காலச்சட்டம் மூலம் மக்களை அடக்கும் போது மீண்டும் மீண்டும் மக்களது எதிர்ப்பையும், போராட்ட வேகத்தையும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்களுக்கு வெளிப்படுத்துவதன் மூலம் நாட்டில் ஏற்படும் இடர்களை குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனர்.

எதிர்க்கட்சியின் சுயநலத்திட்டம்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்புடன் கொழும்பில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து தெரிவிக்கையில் தமக்கு அறபு நாடு ஒன்று மசகு எண்ணை தருவதாகவும் அதற்குரிய பணத்தை மூன்று வருடங்களின் பின் கையளிக்க வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டள்ளதாக தெரிவித்திருந்தார்.

அவர் நாட்டு நலனிலும், மக்கள் நலனிலும் அக்கறை கொண்டிருப்பின் அதனை ஏன் அரசின் ஊடாக மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லை என்ற கேள்வி உருவாகியுள்ளது. தமக்கு ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தால் தான் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்ற கோட்பாடு எங்கிருந்து தோன்றியது?

எதிர்க்கட்சிகளில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினர்களும் இப்போது பார்வையாளர்களாக மட்டுமே இருக்கின்றனர் என்று குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் பணவீக்கமும்

நாட்டில் டொலர் தட்டுப்பாடு வருவதற்கு மக்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கின்றனர் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றது. வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படுகின்ற பணம் உண்டியல் ஊடாகவும், அனுமதிக்கப்படாத பரிமாற்றங்கள் ஊடாகவும் நடைபெறுகின்றன. இதனால் வெளிநாடுகளில் இருந்து சரியான முறையில் கிடைக்க வேண்டிய டொலர் நாட்டுக்கு கிடைக்கவில்லை. மேலும் பொருளாதார ரீதியில் பின்னடைவுகள் இருந்தாலும் இப் பணப்பரிமாற்ற முறை நாட்டை இன்னும் பின்னடைவுக்கு இட்டுச்சென்றிருக்கின்றன என்பது மறுக்கப்படமுடியாத உண்மை.

இன்றைய சூழ்நிலையில் அரசு ஒரு பெறுமதிக்கு டொலர் பெறுமதியை அறிவித்திருந்தாலும் கறுப்பு சந்தையில் அதிகளவான தொகையை கொடுத்து டொலரை கொள்வனவு செய்து பதுக்கும் சமூகமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. இது நாட்டை மென்மேலும் பின்னடைவுக்கு இட்டுச் செல்லும்.

எனவே அரசாங்கம் மட்டுமல்லாது அனைத்து துறையினரும் அவதானமாக செயற்பட வேண்டிய இக்கட்டான சூழலில் இலங்கை தவித்து வருகின்றது.

-தொடரும்-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button